செவ்வாய், 9 நவம்பர், 2010

மீதம் இருக்கும் காலம்...!

இப்படித்தான் மகனே
வாழ்க்கை கனவுகளைத் தின்றுவிடுகிறது...!

ஏமாற்றப் பள்ளத்தாக்கில்
வீசி எறியப் படுகிறாய்

துயரச் சுழல் உன்னை
இழுத்துச் செல்கிறது

பாதைகளை மறிக்கும்
மலைகள்...

இருள் குவிந்து மூடுண்ட வானமாய்
உனது மனம்...

ஆயினும் மகனே
'தலையின் இழிந்த மயிரனையர்'
அல்லன் நீ!
மீதம் இருக்கிறது இன்னும்
உனக்கான காலம்...

எழு!
இயங்கு –
நீயாகவே நீ இரு:
உனக்கான அர்த்தம்
நீயேதான் வழங்கு!
~அ. யேசுராசா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக