திங்கள், 28 மார்ச், 2011

கடனாளியாய்ப் போதல் - ந கோபிநாத்

எண்ணக் கருஞ்சிதையில் எண்ணேலாச் சொப்பனமும்

வண்ணக் கனவுகளும் தீப்பூக்கும். - எண்ணத்தில்

எந்த நிறத்திலெந்தத் தீப்பூ தகிக்கிறதோ

அந்த நிறத்தினதாம் வாழ்வு. 1



என்வாய்ப்போ, வண்ணக் கனவுகளும் கற்பனையும்,

முன்வந்து மோதித் தடையுடைக்கும் என்குணமும்

ஏதோவோர் கீழ்மைக் கரங்களி்லே மாய்ந்திடுதல்

தீதோ திறஞ்செயலோ சொல்? 2



கீ்ழ்மைக் கரங்களவை தாம்பெற்ற பிள்ளைகளோ?

வாழ்வு வருந்துதற்கே வாய்த்ததுவோ? - ஊழ்வினையோ?

கீழ்மைக் கரங்களவை ஓங்குகையில் உய்வதுவும்,

தாழ்வில் தவித்தமுயல் ஆவதுமோ? 3



முற்பாதி, நல்லா முளைக்காத மீசையதும்,

கற்புபற்றிக் கட்டி வளர்த்துவந்த - கற்பனையும்

என்றாகி, முற்றி முழுவளமாய் ஆவதற்குள்

இன்றாகிப் போமோ முறை 4



என்பிரமா? வற்றாத சீவன் திறமளித்தாய்.

மென்மைதனை உள்ளாக்கி வைத்தாய் - வன்முகத்தில்.

என்செய்ய? பட்டார்க்கும், தூற்றிப் பழித்தார்க்கும்

நன்றியென நக்காத நாக்கும் 5



தந்தாய். நாச்சதையை நன்றாய் வளைத்தெடுத்து

தந்திரமாய்த் தண்டுதலைத் தந்திலையே - மந்திரியே?

எந்தை மனப்பண்பும், தாயின் குணமான

முந்திவரும் பண்பும் இணையாம் 6



இப்பிறப்பை எந்தைக் குணத்தோடு ஏற்பதுவோ?

எப்பொழுதும் கீழ்மைக் கரங்களிலே தப்பலின்றித்

தேம்புவதோ? தாயின் குணத்தில் உயர்வதுவோ

வீம்புடனே வீறுநடை வீச? 7



தந்தார் தரப்பழித்தார் என்பதுவோ; இப்பிறப்பை

குந்தர் கரங்களி்லும் அற்றதுமாய்; - எந்தை

குணமெனவும் தாயவளின் குணமெனவும்; எந்தக்

குணகங்களில் கொட்டி விட? 8



கணக்கெடுத்து பட்ட கடன்களெவை? கடைசிவரை

நிணவுடலம் நிற்கும் எனக்கொடுத்தோர் ரணங்களெவை?

பிணவுடலம் போகும் இடங்களெல்லாம் பாவிகொள்

பணக்கடனைப் பற்றிடுமோ பார்? 9



ஈஃதிருக்க, தண்ணீரில் ஒட்டாத தாமரையாய்;

மீதிருந்து தன்நீரைக் கொல்லவெனத் தீயிருந்தாள்.

நீர்வற்றி நீறுறுத்து, நட்டதடம் நாசமான

ஓர்பத்து ஆண்டுக் கடன். 10



பார்விட்டுப் பாவிற் பறப்பெடுத்துப் பன்முகமாய்

ஊர்விட்டு ஊர்மேய்ந்த உட்பசிக்கு - தார்கொள்

நிறத்தும் குணத்தும் நிறைவுடையாள் தண்மை

நிறைந்தட்கு நேர்மை கடன். 11



நெஞ்சுக்கு நெஞ்சாய் நெளிவுக்குத் தான்நெளிந்து

மஞ்சத்தில் நேராய் மயங்கியாடி - கொஞ்சற்குக்

கோவை கொடையாக்கி, பஞ்சத்திற் பாம்பாகப்

பாவை பசியாறும் பாகனாய் 12



நானிருந்து பட்ட பெருங்கடனை; நாலுமுறை

தானிறைத்த பேரிழப்பை ஈற்றினிலே நானிறைக்க,

ஊன்கொதித்து வந்த உறுபசியும் ஆறிடவும்,

தான்தனியே ஆகும் தனம் 13



தானுடைத்தள். என்னிடத்தில் என்னை இரையெனவும்

ஈனுடலைப் பேறெனவும், தின்னவொரு தீனுடலாய்

ஆக்கி வனத்திடையே வந்த பெருமரக்கி

போக்கி முடிப்பாளோ பட்டகடன்? 14



இவ்வகையில் எல்லா உயர்பிறப்பும் உய்வடைய

ஈவதற்காய் என்னைப் படைத்ததுமேன்? இவ்வுலகு

இன்னும் பலதடவை நான்பிறந்து முற்பிறப்பின்

வன்மம் குறைக்கவொரு வாய்க்காலோ? 15



ஒற்றைப் பிடியினிலே ஓருடைவிற் தான்தோன்றி

நிற்காப் பெருஞ்சுடராய்ச் சூழுமொரு அற்புதமாய்

முற்றாப் பிரிவுகளை முன்னெடுத்துத் தன்முடிவிற்

கற்றைக் கருங்குழியில் கொடுப்பதற்கோ ? 16

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக