புதன், 4 மே, 2011

அவள் புலராத அதிகாலை by - Iyyappa Madhavan

நீள்கிற கணங்களில் விழுந்து மறைந்துகொண்டிருக்கிறாள்

நான் நீர்வற்றிய நீர்நிலையில்

வெடிப்புகளில் தோன்றிக்கொண்டிருக்கிறேன்

அவளற்ற இந்நாளின் என் நொடிகளில்

சர்ப்பங்கள் தீண்டுகின்றன

கொடிய நஞ்சின் வன்மம் கண்ணிமைகளை

ஓங்கி சார்த்த சயனத்தில் சாய்கிறேன்

மூடிய இமைமூடிகள் மூடியும் மூடாது

அவளின் சித்திரத்தை வரைய முனைகின்றன

வண்ணக்குழைவுகளுள் இதழ்கள் செந்நிறத்தில்

வசீகரிக்க குப்புற கவிழ்ந்து முத்தமிடுகிறேன்

சிமெண்ட் தரையதின் குளிர்வினில்

கற்பனித்த ஓவியத்தை தவறவிடுகிறேன்

அதிகாலை புலர்ந்து அவள் புலர

புலராத அவள் கதவனில் விழிதிறந்திருக்கிறேன்

அவள்திசை திறந்துவிடும் ஆழ்ந்த கணிப்பினில்

அகத்தினில் அவள் காதல் மீட்டெடுக்கிறேன்

இருக்கின்ற உலகின் நிலை குலைந்து

நிச்சலனமில்லாது கொடிய வெயிலினூடே

காய்ந்துதிரும் இலையினில் கிடக்கிறேன்

ஒரு சொல் ஒலிக்க கேட்காமல்

துவழ்கின்ற செவிகளில் நேற்றைய

அவளின் உரையாடல் திரும்பவும் ஒலிக்கிறது

மணித்துளிகள் காற்றோடு காற்றாக

ஒடிந்து சாயும் மனதுடன் இமைமுழுதும்

கடலோட உப்புக்கற்களாகின்றேன்

நோவுகள்கூடி சிரம் சோர்வினில் உழல

இந்நாளின் மீது நடக்காத அவள் சொற்களை

இ்ழந்தகொண்டு பேதலிப்பில் கனக்கின்றேன்

முளைக்கும் மறுபொழுதில் துளிர்க்கும்

அவள் நுனியிலையில்

ஒளிவேத்தில்அரும்பும் கனாவினில் நடக்கின்றேன்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக